Tuesday, December 2, 2008

ஈழத் தமிழர் மீதான போரை நிறுத்த வேண்டும்: 10 ஆயிரம் மாணவர்கள் பேரணி!












இலங்கையில் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். சிங்கள இனவெறிப் பிடித்த இராணுவம் அப்பாவி ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. பள்ளிக்குச் செல்ல வேண்டிய இளஞ்சிறார்கள் விமானக் குண்டு வீச்சுக்குப் பயந்து பதுங்கு குழிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இரத்த வெறிப் பிடித்த இராணுவத்தின் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது. ஈழத் தமிழ் இனமே பூண்டோடு அழிந்துப் போகும் நிலை உள்ளது. இந்த இனவெறிப் போரை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வேடிக்கைப் பார்த்து வருகின்றன.

வாழ்வின் வசந்தத்தை அனுபவிக்க வேண்டிய ஈழத் தமிழ்க் குழந்தைகள் தாய் - தந்தையரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வீடு, வாசல் இழந்து ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக காடுகளிலும் முகாம்களிலும் தங்கி உள்ளனர்.

உலகம் முழுவதுமுள்ள 12 கோடி தமிழர்கள் ஈழத் தமிழர்கள் மீதான இனவெறிப் போரை கண்டித்துள்ளனர். மனித உயிர்களை மலிவாக கருதிப் போர் தொடுத்து வரும் சிங்கள இனவெறி ராஜபக்ஷே அரசை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

தாய்த் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழரைப் பாதுகாக்க இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிட்டு அங்கு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கப்படுகிறது. இந்திய அரசே! ஈழத் தமிழர்கள் மீதான இனவெறிப் போரை தடுத்து நிறுத்து என்ற கோரிக்கையை அனைத்து தரப்பு மக்களும் எழுப்பி வருகின்றனர்.

மாணவர்கள் எழுச்சிப் பெற்றால் வெற்றி கொள்ள முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கேற்ப புதுச்சேரி மாணவர்கள் ஒன்றுதிரண்டு ஈழத் தமிழர்களுக்குத் தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டியுள்ளனர். புதுச்சேரியே குலுங்கிய பேரணி ஒன்றை நடத்திக் காட்டியுள்ளனர்.

4.11.2008 செவ்வாயன்று, புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாபெரும் எழுச்சிப் பேரணி நடத்தினர். 10 ஆயிரம் மாணவ- மாணவியர் கலந்து கொண்ட பேரணிக்கு, மாணவர்களை ஒருங்கிணைக்க இரவுப் பகலாக பாடுபட்ட புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் சதீஷ் (எ) சீ.சு. சாமிநாதன் தலைமைத் தாங்கினார்.

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகிலிருந்து புறப்பட்ட பேரணி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக ஆளுநர் மாளிகையைச் சென்றடைந்தது.

பின்னர், இந்திய அரசே, ஈழத் தமிழர்கள் மீதான போரைத் தடுத்து நிறுத்து, இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவி வழங்காதே, தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள கடற்படை மீது நடவடிக்கை எடு என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு கோவிந்சிங் குர்ஜார் அவர்களிடம் மாணவர்கள் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் அவர்கள் மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.

ஈழத் தமிழர்கள் சிந்தும் ரத்தம்... நம் ரத்தம்... என்பதை உலகிற்கு உணர்த்திட மாணவ-மாணவியர் மனுவில் இரத்த கையயழுத்திட்டனர். மாணவர்கள் வெளிக்காட்டிய இந்த இரத்த உறவு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

மாணவர்களின் எழுச்சிமிகுப் பேரணிக்குப் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் ஆதரவுத் தெரிவித்தன. இப்பேரணி வெற்றியடைய முழு ஒத்துழைப்புத் தந்த மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க கலைமாறன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மறுமலர்ச்சி தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் வ.செல்வராசு, நெய்தல் அரசு ஊழியர் பேரவையின் செயலாளர் மாறன், பொருளாளர் மோகன், பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் இர.தந்தைபிரியன், பொருளாளர் வீர.மோகன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, பார்வர்ட் பிளாக் கட்சியின் செயலாளர் எஸ்.யூ.முத்து, புதுவை கிறித்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், புதுவைக் குயில் பாசறை ச. ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி முழுவதுமுள்ள கல்லூரி, பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு பேரணியில் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். புதுச்சேரி- தமிழக மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் இப்பேரணியைப் பாராட்டினர்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க கோரிக்கை அடங்கிய அட்டைகளைக் கையில் ஏந்தி வந்தது அனைவரையும் ஈர்த்தது.

பேரணி செய்தியை அனைத்து தமிழ், ஆங்கில நாளிதழ்கள், காட்சி ஊடகங்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டன. அவர்களுக்கு நன்றி கூறுவது நம் கடமை.


புதுச்சேரி முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி...

பேரணிக்காக 10 ஆயிரம் துண்டறிக்கைகள், ஈழத்தமிழர்கள் பாதிப்புக்குள்ளான படங்கள் அடங்கிய 500 வண்ண சுவரொட்டிகள், ஒரு நிமிடம் அளவு கொண்ட ஊடக காட்சி விளம்பரம் ஆகியவை மூலம் பேரணிக்கு மாணவர்களைத் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி வரலாற்றில் இதுபோன்ற எழுச்சிமிகுப் பேரணி இதுவரையில் நடைபெறவில்லை என்பதை உலகிற்கு உணர்த்திய மாணவர்களின் ஒற்றுமை போற்றத்தக்கது.

“மாணவப் படையால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை
அதை உலகம் உணரும் நாள் வெகுதூரமில்லை.”

பேரணியில் பங்கேற்ற கல்லூரிகள், பள்ளிகள் :

கல்லூரிகள் : டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, சமுதாய கல்லூரி, பாரதியார் பல்கலைக் கூடம்.

பள்ளிகள் : நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல் நிலைப் பள்ளி, ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, இந்திரா நகர் அரசு மேல் நிலைப் பள்ளி, இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, கல்வே காலேஜ் அரசு மேல்நிலைப் பள்ளி, திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளி, குருசுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி.

பேரணி வெற்றிக்குப் பின்னால் :

சதிஷ் (எ) சீ.சு. சாமிநாதன் (அமைப்பாளர், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு)
கெளதம பாஸ்கர், ஆனந்து (புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்), பிரவீன், குமரேசன், பெ.பிரன்சிஸ், செ.செந்தில் குமார், சி.விசு. (டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி), தினேஷ் குமார், ஜீவகன் (தாகூர் அரசு கலைக் கல்லூரி), ஆர். நிஷாந்தி, ருச்சி ஜெயின், கு.மா. பவானி, அறிவுச்சுடர், கலைச்செல்வி (பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி), கருணாகரன், டி. முகமது யூசுப், அ. அருள் பிரகாஷ், ப. ரவிச்சந்திரன், எஸ். ஸ்ரீராம் (சமுதாய கல்லூரி), பன்னீர்செல்வம், ஸ்ரீமுருகன், ரவி, பிரபாகரன், சரவணன் (பாரதியார் பல்கலைக் கூடம்), கே. தினேஷ், கே. விவேக், ஆர். ஜெயராமன், எஸ். சந்தோஷ், டி. சந்தோஷ், (ஜீவானந்தம் அரசு மேல் நிலைப் பள்ளி), எஸ். ராஜேந்திரன், எஸ். ரவி, அ. முனுசாமி, எஸ். கார்த்திக் (இந்திரா நகர் அரசு மேல் நிலைப் பள்ளி), முகுந்தன் (நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளி).

ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தவர்கள் :

சதீஷ் (எ) சீ.சு.சாமிநாதன், கெளதம் பாஸ்கர், ஆனந்து (பட்ட மேற்படிப்பு மையம்), பிரவின், குமரேசன் (டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி), கு.மா.பவானி, கலைச் செல்வி, அறிவுச் சுடர் (பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி), நர்மதா (சமுதாய கல்லூரி).

1 comment:

எல்லாளன் said...

நன்றி அனைத்து உறவுகளுக்கும் எல்லாளன்